மோசடியில் சிக்கிய மோசக்கார ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ்

Arasiyalkannadi

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பு போலீசார்களின் கைத்தடியாக செயல்பட்டு வந்ததாக நீண்டகாலமாக ஒரு குற்றச்சாட்டு உண்டு.

கிட்டத்தட்ட இவர்கள் ஒரு பினாமி போலீஸ்காரர்கள்… என்பார்கள் சிலர்…

இவர்களின் முகத்திரையை கிழிப்பதற்கு சரியாக நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள் சிலர்…!

ஆனால் பரிதாபம் சாத்தான்குளத்தில் இரண்டு அப்பாவிகளின் அதாவது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மகன் உயிர்களை பலி வாங்கியபின் தான் இந்த சாத்தான்களின் முகம் வெளி உலகத்திற்கு தெரிந்தது.

அதன் பின்னர் இவர்களை போலீசாரை பிடித்திருக்கும் கேன்சர் என்று ஒரு உயர் அதிகாரி வர்ணித்தார்.

சாத்தான்குளம் சாத்தான்கள் தமிழகத்தில் எங்கும் வியாபித்து பரவியுள்ளது.

இதற்கென விசேஷமான ஒரு தனிப் பிரிவு…. விசாரணையை துவங்கினால் சாத்தான்களின் சாதனைகளைப் பற்றி திடுக்கிடும் பல உண்மைகள் வெளி வருவது உறுதி….

உதாரணமாக.. கோவை மசக்காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அன்னூர் பகுதியில் செல்வநாயகி புரமோட்டர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம், ஒரு வீட்டுமனை 1.35 இலட்சத்திற்கு விற்பனை செய்வதாக விளம்பரம் செய்துள்ளது.

இதனைப் பார்த்த, தனலட்சுமி காந்திபுரம் பகுதியில் உள்ள அந்நிறுவன அலுவலகத்திற்கு சென்று விசாரித்து பணமும் கட்டியுள்ளார். மேலும், 3 இலட்ச ரூபாய் கொடுத்தால் 4 சைட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என அந்நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதன் பேரில் தனலட்சுமி தவணை முறையில் 3 இலட்ச ரூபாய் பணத்தை கட்டியுள்ளார். ஆனால் வீட்டுமனைகளை பதிவு செய்து தராமல் அந்நிறுவன உரிமையாளர்கள் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இது குறித்து விசாரிக்க அவர்களது காந்திபுரம் அலுவலகத்திற்கு தனலட்சுமி சென்ற பார்த்த போது அந்த அலுவலகம் காலி செய்யப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தொடர்ந்து, அன்னூரில் உள்ள வீட்டு மனைக்கு சென்று பார்த்த போது அந்த வீட்டு மனைகள் வேறொருவருக்கு விற்பனை செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், வீட்டு மனைக்கு தனலட்சுமி கொடுத்த பணத்தையும் திருப்பித்தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர்.

இது தொடர்பாக காட்டூர் காவல் நிலையத்தில் தனலட்சுமி புகார் அளித்தார். இதன் பேரில் அந்நிறுவன உரிமையாளர்களான கோவை மாவட்ட ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மற்றும் ஈஸ்வரன், கிருஷ்ணகுமார் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் மீது ஏற்கனவே ஒரு நில மோசடி வழக்கு உள்ளது.

இந்த நில மோசடி பிரண்ட்ஸ்களிடம் கோவை பீளமேடு, பாலன் நகரை சேர்ந்த விஜயகுமார், மாத தவணை முறையில் இரண்டு வீட்டு மனை வாங்கினார்.

தவணை தொகையினை ஈஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வசூலித்தனர்.

மொத்தம், 3.98 லட்சம் ரூபாய் தவணை தொகையை, 2016ல் செலுத்திய பிறகு, கிரயம் செய்து தருமாறு விஜயகுமார் கேட்டிருக்கிறார்.

ஆனால், வீட்டு மனைக்கு ‘அப்ரூவல்’ கிடைக்க வில்லை என்று கூறி செந்தில் குமார் இழுத்தடித்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டு மனையை பார்க்க சென்ற போது, அதே வீட்டு மனையை மற்றொரு நபருக்கு கிரயம் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.பீளமேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, செந்தில்குமார், ஈஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்தார்கள், விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள், விசாரிக்கின்றனர்.

செய்திகள்:- சங்கரமூர்த்தி தலைமை செய்தியாளர்

You may like

In the news
Load More
ads