இந்து அறநிலைய துறை அறங்காவலர்களின் முழு விவரங்களை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Arasiyalkannadi

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் அறங்காவலர்களின் பெயர், தொழில், முகவரி உள்ளிட்ட விவரங்களை, எட்டு வாரத்தில் வெளியிட, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் அறங்காவலர் பெயர், தொழில், சுய வருமானம், கோவிலின் பாரம்பரிய நடைமுறைகளின் ஞானம், கோவில் நில ஆக்கிரமிப்பில் ஈடுபடாதவரா, அரசியல் தலையீடு இல்லாமல் பணியாற்றக்கூடியவரா என்பது போன்ற விவரங்களை, அந்ததந்த பகுதிகளில் உள்ள நாளிதழ்களில் பொது அறிவிப்பாக வெளியிட்டு, கோவில் அலுவலகங்களில் பக்தர்களின் பார்வைக்கு வைக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டுமென, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஸ்ரீ ராஜகோபாலசாமி குலசேகர ஆழ்வார் திருக்கோவிலின் அர்ச்சகர் பெரியநம்பி நரசிம்ம கோபாலன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.கார்த்திகேயன் தாக்கல் செய்த பதில் மனுவில், துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சில கோவில்களின் அறங்காவலர் பெயர்கள் வெளியிடப்பட்டு   உள்ளதாகவும், அவர்களின் குடும்பம் பற்றிய தனிப்பட்ட தகவலை வெளியிட முடியாது. மேலும், குறிப்பிட்ட தகவல்களை விரும்புவோர், தகவல் உரிமை சட்டம் மூலம் கேட்டுப்பெறலாம் என, விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்ரீதர், பெயர் வெளியிடுவது மட்டும் போதாது என்றும், கோவில் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க தொடர்பு எண்ணை அறிவிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து, கோவில்களின் அறங்காவலர்களின் பெயர், முகவரி, தொழில், அவர்களின் தொடர்பு எண் ஆகியவற்றையும், கோவில் குறித்த புகார்களைத் தெரிவிக்க வேண்டிய அதிகாரிகளின் விவரங்களையும், கோவில்களின் அறிவிப்பு பலகையில் 8 வாரங்களில் வெளியிட வேண்டுமென, அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

இதுபோன்ற பல பொதுநல வழக்குகளை உயர் நீதிமன்றங்கள்.
விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

சில வழக்குகளில் எச்சரிக்கையும் செய்து உள்ளது…!

உதாரணமாக தமிழகத்தில் உள்ள நதி நீர் நிலைகள் மற்றும் கனிம வளம், மணல் கொள்ளைகள் போன்றவற்றை குறிப்பிடலாம்.

ஆனால் இதுவரை இதுபோன்ற நீதிமன்ற உத்தரவுகளுக்குஅரசு எந்த அளவுக்கு செவிசாய்த்து உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

இதுவும் அது போல் ஆகி விடக்கூடாது என்பதே நமது வருத்தம்.

செய்திகள்:- சங்கரமூர்த்தி தலைமை செய்தியாளர்

You may like

In the news
Load More
ads